vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

பெங்களூரில் திறக்கப்பட்டது அய்யன் திருவள்ளுவர் சிலை

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்படவிருந்த 'அய்யன்' திருவள்ளுவர் சிலை பல எதிர்ப்புகளையும் தாண்டி, ஆகஸ்டு 9, 2009 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பல்வேறு முயற்சிகளின் விளைவால் திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்புவிழாவின் மூலம் இரு மாநில உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பெங்களூர் அல்சூர் ஏரிக் கரையில் உள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிலை திறப்பு நிகழ்ச்சி பூங்காவின்அருகில் அமைக்கப்பட்டுள்ள R.P.A.N.M. பள்ளிக் கூடத்தில் இவ்விழா தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பெங்களூர் தமிழர்கள் மற்றும் தமிழகத்திலிருந்து சென்றிருந்த தமிழர்கள் முன்னிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்.

கர்நாடக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, சிவாஜி நகர் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க், பெங்களூர் மத்திய தொகுதி பாஜக எம்.பி. மோகன், பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, பெங்களூர் தெற்கு பாஜக எம்பி அனந்த்குமார், மத்திய அமைச்சர்கள் ராசா, ஜெயகத்ரட்சகன், தமிழக சபாநாயகர் ஆவுடையப்பன், தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி, ஏ.வ.வேலு, தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.முதல்வர் கருணாநிதியுடன் அவரது மனைவி தயாளு அம்மாளும் கலந்து கொண்டார்.

இவ்விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்புகள் பந்த்திற்கு அழைப்பு விடுத்தன. ஆனால் இந்த பந்த்திற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளுவர் திறப்புவிழா நிகழ்ச்சி அரசு விழாவாக கர்நாடக அரசே ஏற்று நடத்தியது.

பிரச்சினையின் காரணமாக மூட்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை திறப்புக்கு பகரமாக சென்னையில் கன்னட கவிஞர் சர்வஞ்னரின் சிலை திறப்புவிழா ஆகஸ்டு 13 ஆம் தேதி சென்னையில் திறக்கப்பட விருக்கிறது.

கன்னட கவிஞர் சர்வஞ்னர்:

சர்வஞ்னர் என்பதற்கு 'சமஸ்கிருதத்தில் அனைத்தும் அறிந்தவன்' என்று பொருள்படும். இவர் சுமார் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகவிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 'அய்யன்' திருவள்ளுவர் இரண்டு வரிகளில் பாடல்கள் எழுதியதைப் போல இவர் மூன்று வரிகளில் பாடல்கள் எழுதியவர். இவரது உண்மையான பெயர் 'புஷ்பதத்தா' என்றும் கூறப்டுகிறது. இவரது தந்தை பிராமணர். இவராது தாய் சூத்திரவம்சத்தை சேர்ந்தவர் என தகவல்கள் கூறுகின்றன.

இரண்டு கவிஞர்களின் நினைவு கூறல் மூலம் மாநில உறவுகள் வலுப்படுவதையும் இந்திய தேசிய நலனும் பாதுகாக்கப்படுவதை வரவேற்போம்.