vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

வ.களத்தூர் இஸ்லாமியர்களின் தமிழார்வமும் ஊரின் அழகும்



( தமிழ்த்தாத்தா என அன்போடு அழைக்கப்படும் டாக்டர் உவே.சாமிநாதஅய்யர், மிகச் சிறந்த தமிழறிஞர். இவர் தனது ‘என் சரித்திரம்’ எனும் நூலில் வ.களத்தூர் மக்களின் தமிழறிவைப் பற்றி எழுதியுள்ள குறிப்பைத்தருகிறோம். இவரது காலம் கி.பி. 19 பிப்ரவரி 1855 முதல் கி.பி. 06 மார்ச் 1935)

வ.களத்தூர், ஜீவநதியாகிய வட வெள்ளாற்றின் கரையில் உள்ளது. பலவகை ஜாதியினரும் நிரம்பப் பெற்றுத. முகமதியர்கள் கொடிக்கால் வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர். அவர்களில் சிலர் தமிழ்ப்பயிற்சி உடையவர்களாக இருந்தனர். பல இடங்களில் நந்தவனங்களும் தோட்டங்களும் இருந்தன. வ.களத்தூரைச் சார்ந்த ரஞ்சன்குடி துர்க்கமெனும் மலையரனும் ஊரும் உண்டு. அங்கே நவாப் இருந்து வந்ததாகச் சொல்லுவார்கள். அவர்களுக்குச் சொந்தமான நிலங்களும் மிகப் பெரிய தோட்டமும் களத்தூரில் இருந்தன. வ.களத்தூரும் அதனைச் சார்ந்த துர்ககமும் நல்லக் காட்சிகளையுடையன. ஏனக்கு அவை அதுகாரும் அடையாத ஆனந்தத்தை உண்டாக்கின. ரஞ்சன்குடி துர்க்கத்திற்குச் சென்று அத்துர்க்கத்தின் அமைப்பையும் வ.களத்தூரில் உள்ள தோட்டத்தின் அழகையும் கண்டு மனமகிழ்வேன். அக்கம் பக்கங்களில் உள்ள முகமதியர்களின் தமிழறிவு நன்கு வாய்ந்தவர்களை சந்தித்து அவர்களோடு சம்பாஷித்து அவர்கள் கூறும் செய்யுட்களைக் கேட்டு இன்புறுவேன். அவர்கள் வேறு மதத்தினராக இருந்தாலும் தமிழின் நயத்தில் ஈடுபட்டு தமிழ் செய்யுட்களை பாடம் பண்ணுவதும், அவற்றின் சுவையை அனுபவித்து , பிறருக்கும் எடுத்துக் கூறி அவர்களையும் அனுபவிக்க செய்வதுமாகிய காரியங்களைச் செய்து வந்தனர்.
துறைமங்கல சிவப்பிரகாச சாமிகள் சஞ்சரித்த இடங்களாதலின் அப்பிரதேசங்களில் அவரைப்பற்றிய செய்திகள் மிகுதியாக வழங்கிவரலாயின. அவர்களுடைய நூல்களிலே மதிப்பு வைத்து யாவரும் படித்து வந்தனர். அவர் வீர சைவராக இருப்பினும் முன்னேக் கூறிய முகமதியர்கள், அவருடைய வாக்குக்குரிய மதிப்பை அளித்தலில் தவறவில்லை. அவர்கள் ( வ.களத்தூர் முகமதியர்கள் ) மஸ்தான் சாஹிபு பாடல், சிறாப்புராணம், என்பவற்றில் அன்பு வைத்து படித்துவந்தார்கள். அவற்றைப் போலவே கம்பராமாயணம், திருவிளையாடல், பிரபுலிங்க லீலை முதலியவற்றிலும் மதிப்புடையவர்களாகிக் கற்று வந்தனர். அதனால் அவர்களிடத்தே எனக்கு ஈடுபாடு உண்டாயிற்று..........

------- உ.வே.சா .( ‘என்சரித்திரம்’ எனும் நூலிலிருந்து )