vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

கேரள மாநில முஸ்லிம் லீக் தலைவர் சையது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள் வஃபாத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில தலைவர் பானக்காடு சையது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள் (வயது 73) சனிக்கிழமை (01.08.2009) அன்று கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அன்னாரின் மறைவு செய்தி கேள்வியுற்று குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க (K-Tic) நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் அன்னாரின் ஹக்கில் துஆ செய்தனர்.

அன்னாரின் வாழ்க்கைக் குறிப்பு

கேரள மாநிலம் மலப்புரம் ஜில்லா பானக் காட்டில் வசித்து வந்த ஷிஹாப் தங்ஙள் 1936-ம் வருடம் மே மாதம் 4-ம் தேதி பிறந்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெருந்தலைவர் பூக்கோயா தங்ஙள் மறைவிற்குப் பின் 1975-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி கேரள மாநில தலைவராக பொறுப் பேற்ற ஷிஹாப் தங்ஙள் 34 வருடங்கள் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து சரித்திர சாதனை படைத்துள்ளார். கேரள மாநிலத்தில் அரசியல் கட்சியின் தலைவர் பொறுப்பில் அதிக ஆண்டுகள் இருந்த பெருமை ஷிஹாப் தங்ஙளுக்கே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சந்திரிகா நாளிதழில் நிர்வாக இயக்குநராகவும், 400 மஹல்லா ஜமாஅத்களின் தலைமை காஜியாகவும் சேவையாற்றியுள்ளார். பானக்காடு டி.எம். ஆர்.டி. பள்ளிக்கூடத்தில் ஆரம்ப கல்வியும், கோழிக்கோடு எம்.எம். உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.,யும் படித்த ஷிஹாப் தங்ஙள், 1958 முதல் 1961 வரை அல்-அஸ்கர் பல்கலைக்கழகத்தில் 1961 முதல் 1966 வரை கெய்ரோ சர்வ கலாசாலையிலும் அரபிக் கல்வி பயின்ற ஷிஹாப் தங்ஙளின் தாயார் பெயர் ஆயிஷா பீவியாவார்.

1966-ம் ஆண்டு கல்வி முடித்து திரும்பிய ஷிஹாப் தங்ஙள் 1966-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி ஷரீபா பாத்திமாவை மணந்தார். அவருக்கு செய்யது பஷீர் அலி ஷிஹாப் தங்ஙள், செய்யது முனவர் அலி ஷிஹாப் தங்ஙள் ஆகிய 2 மகன்களும், செய்யது ஃபைரோஸ், செய்யது ஷுஹாரா, செய்யது ஷமீரா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

வஃபாத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 39-வது தலைமுறையில் வந்த 73 வயதை எட்டிய ஷிஹாப் தங்ஙள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களில் அகில இந்திய அளவில் முன்னணி தலைவராகவும், கேரள மாநிலத்தின் முக்கியத் தலைவராகவும் இருந்து வந்த ஷிஹாப் தங்கள் சனிக்கிழமை (01.08.2009) அன்று மாலை குளியலறைக்குச் சென்றபோது கால் தடுமாறி விழுந்ததை தொடர்ந்து கோழிக்கோடு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இரவு 9 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.

அன்னாரது உடல் பொது மக்கள் பார்வைக்கு பானக்காடு தங்ஙள் வீட்டில் வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை (02.08.2009) அன்று பிற்பகலில் பானக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.