vkalathur.com vkalathur.com v.kalathur
Hello FM

V.kalathur

வி.களத்தூர் பாலம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல்லை நாட்டினார் மத்திய மத்திரி அ.ராசா

வி.களத்தூர் கல்லாற்றுப் பாலம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா 19-10-2009 திங்கள் கிழமை வி.களத்தூரில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை வேப்பந்தட்டை ஒன்றியகுழு தலைவி மகாதேவி ஜெயபால் வரவேற்றார். போலீஸ் சூப்பிரண்டு வனிதா, எம்எல்ஏக்கள் பெரம்பலூர் ராஜ்குமார் மற்றும் ஆண்டிமடம் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அடிக்கல் நாட்டிப் பேசிய மத்திய மத்திரி அ.ராசா ' இப்பாலத்திற்கு ஏற்கனவே ஒதுக்கிய தொகை 2 கோடி மட்டுமே. இத்தொகையை 4.16 கோடியாக உயர்த்தி நிதி ஒதுக்கீடு செய்து மாநில முதலமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார்' என்று பேசினார்.

பாலத்தின் நீள அகலம்:

இப்பாலம் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரஞ்சன்குடி-வி.களத்தூர்-கை.களத்தூர் பாலம் கட்டப்பட உள்ளது. இப்பாலம் 149.40 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்டதாகும். 9 கண்களைக் கொண்டதாகக் கட்டப்படும் இப்பாலத்தின் கண்கள் ஒவ்வொன்றும் 16 மீட்டர் நீளமுள்ளதாகும்.

12 மாதத்தில்

மாவட்ட ஆட்சித்தலைவர் மா.விஜயகுமார் இ.ஆ.ப அவர்கள் பேசும்போது.' இப்பாலத்தின் பணிகள் 12 மாதங்களில் முடிவடைந்துவிடும்' எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவி கொடியரசி துரைசாமி, மாவட்டகவுன்சிலர் சு.தங்கராசு, ஊராட்சி மன்ற தலைவர்கள் பசும்பலூர் பழனிவேலன் , வி.களத்தூர் சாந்தி கலியமூர்த்தி. அயன் பேரையூர் லட்சுமி மருதமுத்து, ஒன்றிய குழு உறுப்பினர்கள் நூருல் குதா, ஹயாத் பாஷா மற்றும் முஹம்மது இஸ்மாயில் உள்பட ஊரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பு :

வி.களத்தூர் கல்லாற்றுப் பாலம் பல்வேறுகாலங்களில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பகுதி பகுதியாக சிதிலமடைந்து உடைந்துவிட்டது. 2002 ஆம் ஆண்டு பாலம் இடிந்து விழுந்தது. அவ்வப்போது பல்வேறு சிறுசிறு மராமத்துப்பணிகளுடன் பயன்பாட்டில் இருந்த பாலம் முழுமையான போக்குவரத்திற்கு பயன்படாமலே இருந்தது.

2005 ஆம் ஆண்டு மீண்டும் பெய்த பெருமழையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. பிறகு மீண்டும் ரிப்பேர் செய்யப்பட்டது. ஆயினும் முழுபயன்பாட்டிற்கு தகுதியுடையதாக இருக்கவில்லை.

நவம்பர் 2008 ல் பெய்த பெருமழை மற்றும் சூறாவளியில் வி. களத்தூர் கிராமத்தில் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பாலம் ஆற்று நீரில் அடியோடு அடித்துச் செல்லப்பட்டதால், அங்கு போக்கு வரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால், இப்பகுதிக்கு அருகே உள்ள மில்லத் நகர், இனாம் அகரம், பசும்பலூர், திருவாளந்துறை உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் அப்போதைய பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அனில்மேஷராம் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

பல்வேறு நிலைகளில் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு தி.மு.க. ஆட்சியில் வி.களத்தூரைச் சுற்றியுள்ள சுமார் 18 கிராமங்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக பல்வேறு வகையில் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்து இத்திட்டத்திற்கு உறுதுணையாகவிருந்தத மத்திய அமைச்சர் அ.இராசா அவர்களுக்கும் மற்றும் து.நெப்போலியன் அவர்களுக்கும் வி.களத்தூர் பொதுமக்கள் சார்பாக வி களத்தூர்.காம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அதுசரி.....தமிழகத்தில் இலவசத் தொலைக்காட்சி சுமார் 80 சதவீதத்திற்கும் மேல் அளிக்கப்பட்ட நிலையில் வி.களத்தூர் பொதுமக்களுக்கு எப்போது கிடைக்கும் என பாமரனின் கேள்வி காதில் விழுகிறது.